Published : 04 Mar 2020 10:52 AM
Last Updated : 04 Mar 2020 10:52 AM

குட்டிக் கதை 25: உன் நண்பன் யாரென்று சொல்!

“டேய் சங்கர், உன் தம்பி ஏன் இவ்ளோ கெட்ட வார்த்தை பேசறான்? வாயைத் திறந்தாலே மோசமான வார்த்தைகளாவே வருதே, யார்கிட்ட இருந்து கத்துக்கறான்?”

“அதான் எனக்கும் புரியலை. வீட்ல யாரும் இப்படிப் பேச மாட்டோம், ஆனா அவன் எப்படி இப்படியெல்லாம் பேசறான்னு தெரியலை ராபர்ட்”

“உன் தம்பியோட ஃப்ரண்ட்ஸ் எப்படின்னு பாரு, ஒரு வேளை அவங்களால கூட அவன் இப்படி இருக்கலாம்”

“ஃப்ரண்ட்ஸ்ஸாலதான் இப்படி இருக்கான்னு தெரிஞ்சுதுன்னு வைச்சிக்க, அப்ப மட்டும் எப்படி அவனை திருத்தறது? ஃப்ரண்ட்ஸ் கூட சேராதேன்னு சொன்னா கேக்க மாட்டானே”

“மொதல்ல சுமனோட எந்த நண்பன் கெட்ட வார்த்தைகள் அதிகமாப் பேசறான்னு கண்டு பிடி, அப்பறம் நான் சொல்ற மாதிரி செய்தா சுமனைத் திருத்திடலாம்” என்று சொல்லி சங்கரிடம் ராபர்ட் ஏதோ ரகசியம் சொன்னான்.

“சூப்பர் ராபர்ட், நீ சொன்ன மாதிரியே செய்திடலாம்” என்று மகிழ்ச்சியோடு சொல்லி விட்டுச் சென்றான் சங்கர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராபர்ட்டை சந்தித்தான் சங்கர்.

“ராபர்ட், நீ சொன்னது சரிதான், என் தம்பி சுமனுக்கு மருதுன்னு ஒரு ஃப்ரண்ட் இருக்கான், அவன் ரொம்ப மோசமானவனா இருக்கான், அவன் கூட சேர்ந்துதான் இவனும் மோசமா ஆயிட்டான், மருது கூட சேராதேன்னு சொன்னா என்னைத் திட்டறான், ‘நான் யார் கூட வேணும்னாலும் பேசுவேன், அதை ஏன் நீ கேக்கற?’ன்னு சொல்றான்”

“சரி விடு, நாளைக்கு சாயங்காலம் எப்படியாவது உன் தம்பியை நான் சொன்ன பார்க்குக்கு வரச் சொல்லிடு, மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்”

“சரி, நீ சொன்ன மாதிரியே செய்யறேன், எப்படியாவது சுமன் திருந்தினா போதும்”

ராபர்ட் சொன்ன மாதிரியே மறுநாள் மாலை சுமனிடம் ஏதோ ஒரு காரணம் சொல்லி அந்த பார்க்கிற்க்கு அனுப்பி வைத்தான் சங்கர்.

சிறிது நேரத்தில் அங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கையில் சங்கருக்கு ஒரே பதற்றமாக இருந்தது. ஆனாலும் எதுவும் தெரியவில்லை.

சுமன் இரண்டு நாட்களாக எதுவும் பேசவில்லை. “டேய், ரெண்டு நாளா ரொம்ப சோகமா இருக்கறயே, வெளியில கூட எங்கேயும் போகல, என்னதான் ஆச்சு உனக்கு?”

“ஏமாந்துட்டேன் அண்ணா, அதான் ரொம்ப வருத்தமா இருக்கேன்”

“ஏமாந்துட்டயா? யார் உன்னை ஏமாத்தினது?”

“இவ்வளவு நாளா மருதுவை என்னோட பெஸ்ட் ஃப்ரண்டுன்னு நம்பிகிட்டு இருந்தேன், ஆனா அன்னைக்கு பார்க்ல அவன் இன்னொருத்தன்கூட என்ன பேசிட்டு இருந்தான் தெரியுமா?”

“எனக்கு எப்படித் தெரியும்? நீ சொன்னா தானே புரியும்”

“டேய், நீ ஒரு டான் ஆச்சே, அந்த மொக்க பீஸ் சுமன்கூட எப்படிடா நண்பனா இருக்கற?” அப்படீன்னு மருதுகிட்ட இன்னொருத்தன் கேட்டான். “ டேய், உனக்குதான் என்னைப் பத்தித் தெரியுமே, சுமன்லாம் ஒரு லூசு, அவனும் அவன் மூஞ்சியும், அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது, ஆனா ஏன் அவனைக் கூட வச்சிருக்கேன் தெரியுமா? நான் ஏதாவது தப்பு செய்தா அப்போ அவனை மாட்டிவிட்டுட்டு நான் தப்பிச்சுக்குவேன்”ன்னு சொல்றான், அப்பதான் எனக்கு புத்தி வந்துது, இனி அவன்கிட்ட பேசவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

“சரி, எப்படியோ அவன் தப்பான ஃப்ரண்டுன்னு புரிஞ்சிகிட்டயே, அது போதும்” என்று சொல்லிவிட்டு ராபர்ட்டைப் பார்க்கச் சென்றான் சங்கர்.

“ராபர்ட், மருது எப்படி இப்படி பேசினான்?”

“ஹாஹா, மருதுட்ட பேசிகிட்டு இருந்த இன்னொருத்தனே நான்தான். என்ன முழிக்கற, மருது எங்க பக்கத்து வீட்லதான் இருக்கறான். ‘நீ பெரிய ஆளாச்சே, நீ எப்படி சுமன் கிட்ட ஃப்ரண்ஷிப் வெச்சிருக்க?’ அப்படீன்னு உன் தம்பி வரும்போது மருதுகிட்ட கேட்டேன், அவன் உண்மையை உளறிட்டான்”

“எல்லாம் சரி, மருது உன் பக்கத்து வீடு தான்னு ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல?”

“சும்மா ஒரு சஸ்பென்ஸ்காக தான்”

“எப்படியோ என் தம்பி மருதுட்ட இருந்து தப்பிச்சானே, அதுவே போதும்,”

“உன் நண்பன் யாரென்று சொல், நீ யார் என்று சொல்கிறேன் அப்படீன்னு ஒரு சொல் வழக்கு இருக்கு, நல்ல நண்பர்களோட தான் ஃப்ரண்ஷிப் வெச்சிக்கணும்”

“ஆமாம், இனி என் தம்பி நல்லவங்களோட தான் நட்பு வெச்சிப்பான்னு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி, ரொம்ப நன்றி ராபர்ட்” என்று சங்கர் கூறினான்.

நீதி: நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

--கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x