Published : 22 Jan 2020 11:23 AM
Last Updated : 22 Jan 2020 11:23 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தற்காலிக நிறுத்தம்; மீண்டும் மார்ச் மாதம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை சுமார் 42 ஆயிரம் பேர் இங்கு பயிற்சி பெற்றபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இதனால் அரசுப் பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நடப்பு ஆண்டில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வான 19,000 பேருக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. வாரம்தோறும் மாதிரிக் குறுந்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல், தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப் பின் முறையாக நடத்தப்படவில்லை.

நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது. இதில் ஜனவரி இறுதியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கிவிடும் என்பதால் நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது நடத்தப்படாது. அதன்பின் மார்ச் வரை பொதுத்தேர்வு நடைபெறுவதால் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x