Published : 11 Oct 2019 09:26 AM
Last Updated : 11 Oct 2019 09:26 AM

ஆறு, ஏரி, குளம் அருகே செல்ல வேண்டாம்: பள்ளி மாணவர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்

சென்னை

மழைக்காலங்களில் ஆறு, ஏரி, குளம் அருகே செல்ல வேண்டாம் என்று மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு, தனியார் உள்பட அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த
சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும் விபத்துகளையும் தடுப்பதற்காக கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

* மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் வரும்போது சகதியில் வழுக்கி விழக்கூடிய அபாயத்தை எடுத்துச் சொல்லி பாதுகாப்பாக வருமாறு அறிவுரை கூற வேண்டும்.
* மழைக்காலங்களில் மாணவர்களும் அவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மழை கோர்ட்டு அல்லது குடை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
* மழை காரணமாக வகுப்பறைகள் ஏதேனும் பாதிக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைப்பதுடன், அதன் அருகே மாணவர்கள் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தால் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மின்சார ஸ்விட்சுகள் சரியாக உள்ளதா, மழைநீர்படாத வகையில் இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
* மேற்கூரையில் நீர் தேங்கா வண்ணம் தேங்கிக்கிடக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும். அதுபோல் ஆபத்தான நிலையில் உள்ளஉயர் மின்அழுத்தம் உள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பிகள் மின்கசிவின்றி பாதுகாப்பாக உள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
* தொடர்மழை பெய்யும்போது பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* வகுப்பறையில் உள்ள மின்விசிறிகள், மின் விளக்குகள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்க வேண்டும்.
* பள்ளிக்கட்டிடங்களின் மேற்கூரைகளில் தங்கியுள்ள காய்ந்த இலைச்சருகுகள் மற்றும் குப்பைகளை அகற்றி, மழைநீரானது கூரைகளின் மேல் தங்காமல் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குச் செல்லுமாறு வழி
வகை செய்ய வேண்டும்.
* உணவு உண்பதற்கு முன்பாகவும், உணவு சாப்பிட்ட பின்பும் கைகளைச் சுத்தமாக கழுவுமாறு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
* பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ளுமாறு அறிவுரை வழங்க வேண்டும்.
* மாணவர்கள் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரை அருந்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்களுக்குப் பயன்படுத்தும் குடிநீரில் மருத்துவ ஆய்வாளரின் ஆலோசனையின்படி அளவோடு குளோரின் கலந்து உபயோகப்படுத்த வேண்டும்.
* பருவமழை காலங்களில் காய்ச்சி வடிகட்டிய பாதுகாப்பான குடிநீரைப் பருகுமாறு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
* மழைக்காலங்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
* மழைக்காலங்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
* மழைக்காலங்களில் தங்கள் தற்காத்துக் கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக்கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். பருவமழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி அனைத்து வகை பள்ளித் தலைமை
ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்
படுகிறார்கள்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்கண்ணப்பன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x