Published : 17 May 2023 06:18 PM
Last Updated : 17 May 2023 06:18 PM

நீலகிரி மாவட்ட ‘ஹெலிகாப்டர் சுற்றுலா’ திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலி டூரிஸம் சேவை திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டியில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஊட்டியில் உள்ள தீட்டுக்கல்லில் மே 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலி டூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் T.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது. மலைப் பகுதிகளில் ஏற்படும் சிறிய சத்தம்கூட வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள், யானை உள்ளிட்ட விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படும்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் ஹெலிபேட் அமைந்துள்ளதால், பறவைகள், வன மற்றும் வீட்டு விலங்குகள் ஆபத்துகளை சந்திக்க நேரிடும். பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும். 2021ம் ஆண்டு வானிலை சீற்றத்தால் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரி வனப்பகுதியில் ஏறத்தாழ 250 கழுகுகள் மட்டுமே உள்ளன. ஹெலிகாப்டர் போக்குவரத்து, மனித நடமாட்டம், வாகன போக்குவரத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் அவற்றின் வருகை 35.7 சதவீதம் குறைந்துள்ளது. எனவே வரும் 13ம் தேதி தொடங்கவுள்ள ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது” எனக் கூறி, நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலி டூரிஸம் சேவை திட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x