Published : 25 Aug 2022 06:30 PM
Last Updated : 25 Aug 2022 06:30 PM

சினிமா முதல் ‘ப்ரீ வெட்டிங்’ ஷூட் வரை - பரபரப்புக்கும் சுற்றுலா ஸ்பாட் ஆன மதுரை தெப்பக்குளம்

மதுரை: மதுரை தெப்பக்குளம் தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காணப்படுவதால், அதன் பின்னணியில் சினிமா ஷூட்டிங் முதல் ப்ரீ வெட்டிங் ஷூட் வரை அடிக்கடி நடக்கிறது.

வைகை நதி கரையும், அதனுடன் தொடர்புடைய நீர்நிலைகளும் தமிழர் நாகரிகத்தின் பெருமையாக கருதப்படுகின்றன. சங்க கால இலக்கியம் முதல் சமகால வரலாற்று புத்தகங்கள் வரை போற்றிவரும் மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் வரலாற்று சிறப்பு பெற்றது. அதனால், இந்த தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக உள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார். மிகப் பெரிய தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் ஒரு விநாயகர் கோயிலும் உள்ளது. இந்த சுற்றுலாத் தலத்தை வான்வழியாகவும், ரயில் பயணம் மற்றும் சாலை வழியாகவும் எளிதாக செல்லக்கூடியதாக உள்ளது. அதனால், மதுரை வரும் இந்த தெப்பக்குளத்தை சுற்றிப்பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.

தற்போது மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகுப் போக்குவரத்தும் தொடங்கியிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த தெப்பக்குளத்தில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தெப்பக்குளத்தை இந்து அறநிலையத் துறை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. தண்ணீரில்லாமல் நிரந்தரமாக தெப்பக்குளம் வறண்டதால் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறியது.

அதன்பின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்த நிரந்தரமாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெப்பக்குளமும் புதுப்பொலிவுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், கடந்த காலத்தைப்போல் சுற்றுலாப் பயணிகள் இந்த தெப்பக்குளத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். படகுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுவிட்டதால் உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலாப் பயணிகள் வரை குழந்தைகளுடன் இந்த தெப்பக்குளத்திற்கு அதிகமாக வந்து செல்கின்றனர். பழையப்படி தற்போது சினிமா ஷூட்டிங்கும், சீரியல் தொடர்களுக்கான ஷூட்டிங்கும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், சமீப காலமாக தண்ணீர் நிரம்பி ரம்மியாக காணப்படும் தெப்பக்குளத்தின் பின்னணியில் திருமண ஜோடிகள் 'ப்ரீ வெட்டிங்' ஷூட்டிங்கும் அதிகளவு நடக்கத் தொடங்கியிருக்கிறது. திருமண ஜோடிகளை புகைப்படக்காரர்கள், வீடியோ கிராபர்கள் தெப்பகுளத்தின் பல்வேறு பின்னணியில் நிற்க வைத்து 'ப்ரீ வெட்டிங்' நடத்துகின்றனர். இதற்கு தற்பாது மவுசு அதிகரித்துவிட்டதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது இப்படி ஷூட்டிங் நடத்துவோரும் குவிந்துவிட்டதால் மாலை நேரங்களில் திருவிழாபோல் கூட்டம் களைகட்டுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x