Published : 16 May 2024 08:00 AM
Last Updated : 16 May 2024 08:00 AM

உதகை தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.125 ஆக குறைப்பு

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெற்றுவரும் நிலையில், சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.125-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 10-ம் தேதி மலர்க் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. தாவரவியல் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான மலர்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

இதுதவிர 2 லட்சம் கார்னேஷன் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மலை ரயில், டிஸ்னி வேர்ல்டு மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.

கண்காட்சி தொடங்கி 5 நாட்களான நிலையில், குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். அதிகபட்சமாக கடந்த 12-ம் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். பிற நாட்களில், இதைவிட குறைவான பார்வையாளர்களே வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில், மலர்க் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 என்ற பழைய கட்டணமே தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து உதகை வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவைக் காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். அப்போது, வியாபாரம் களைகட்டும்.

இந்தாண்டு அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது.

வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாக கவலை தெரிவித்தனர். அதனால், சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் உதகையில் சுற்றுலாவை நம்பியுள்ள ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x