Last Updated : 17 Dec, 2023 05:41 PM

 

Published : 17 Dec 2023 05:41 PM
Last Updated : 17 Dec 2023 05:41 PM

விதவிதமான விடுதி பிரச்சினைகள் - புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவிப்பு

ஓயிட்டவுன் பகுதியில் உள்ள விடுதிகள். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய கட்டிடங்கள், அழகிய கடற்கரை, படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில் தொடங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தர, விடுதிகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். முக்கிய நாட்களில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ப போதிய விடுதிகள் இல்லை. அத்துடன் தனியார் விடுதிகளில் பலரும் அதிகளவில் கட்டணம் வாங்குவதால் புதுச்சேரியை தாண்டியுள்ள பகுதிகளில் புதிது புதிதாக விடுதிகள் வந்துள்ளன. முறையான அனுமதி பெறாமல் இந்த விடுதிகள் செயல்படுகின்றன. இதனால் அரசுக்குதான் வரி இழப்பு ஏற்படுகிறது.

கடந்த 2019-ல் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் புதுச்சேரியில் வீடுகளில் தங்க வைக்கும் திட்டம் தொடங்கப் பட்டது. அதற்கு 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால் பலரும் முறையான அனுமதி பெறாமல் நகரப் பகுதிகளில் வீடுகளை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக மாற்றி வருகின்றனர். இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்தால், “மொத்தம் 14 வீடுகளுக்குதான் அனுமதி தரப்பட்டது” என்று தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்கள் குறிப்பிடும் எண்ணிக் கையைத் தாண்டி ஏராளமான வீடுகளில் விடுதிகள் இயங்குகின்றன.

பல தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிக ளவில் வசூலிப்பதாக புகார்கள் வந்தாலும் அரசு தரப்பில் இதை கண்டுகொள்வதில்லை. தற்போது புதுச்சேரி நகரத்துக்கு அருகில் உள்ள ஆரோவில், கடலூர், கோட்டக்குப்பம் பகுதிகளிலும் விடுதிகள் அதிகரித்துள்ளன. கட்டணமும் தாறுமாறாக இருக்கின்றன.

அரசு தரப்பில் விசாரித்தால், “தேவை அதிகரிப்பு ஏற்பட்டால் கட்டணம் உயர்வது இயல்பானது. முன்கூட்டியே விடுதிகளை பதிவு செய்வது உலகளாவிய நடைமுறை" என கைவிரிக்கின்றனர்.

வெளியூர் பயணிகள் கூறுகையில், "தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் அரசு தங்கும் விடுதிகளை ஏற்படுத்தி நன்றாக பராமரிக்கின்றனர். குடும்பத்துடன் வருவோர் அவ்விடுதிகளை தேர்வு செய்கின்றனர். புதுச்சேரியில் முன்பு அரசு தரப்பில் நல்ல விடுதிகள் இருந்தன. முன்பு போல் தங்கும் விடுதிகளை தனியார் பங்களிப்புடன் நடத்தாமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப கூடுதல் விடுதிகளை புதுச்சேரியில் கடற்கரையோரம் கிராமப் பகுதிகளில் கட்டினாலும் நல்ல வருவாய் கிடைக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.

க்யூ ஆர் குறியீடு என்னவானது?: புதுச்சேரி நகர பகுதிகளில் அதிகம் நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அதிகளவில் புகார் தெரிவிக்க தொடங்கினர். கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் போக்குவரத்து போலீஸார் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த செப்டம்பர் மாதம் க்யூ ஆர் குறியீட்டை அறிமுகப்படுத்தினர்.

‘இதை ஸ்கேன் செய்தால் வாகனம் நிறுத்துமிடத்துக்கு செல்லும் வழித்தடம் தெரியும்’ என்றனர். ஆனால் இந்த குறியீடு பலகை நகரில் தற்போது எங்கும் இல்லை. போக்குவரத்து கட்டுப்பாடு நிறைந்த பகுதிகளில், சாலை போக்குவரத்து குறியீடு களை வாகன ஓட்டிகளின் கண்களுக்கே தெரியாமல் வைக்கின்றனர். இதனால் சாலை விதிகளில் தவறிழைத்து அபராதம் செலுத்த நேரிடுகிறது என்று சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் ஆதங்கப்படுகின்றனர்.

புதுச்சேரிக்கு வரும் வெளி மாநில பயணிகள் கூறுகையில், "சுற்றுலா தலங்கள் விவரங்கள் குறித்த பலகைகள், சாலை பலகைகள் எல்லாம் மோசமான நிலையில் உள்ளன. அதையாவது மாற்றலாம். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முக்கிய வீதிகளில் போக்குவரத்து போலீஸார் செயல்பட அரசு உத்தரவிட வேண்டும்" என்றும் குறிப்பிடுகின்றனர்.

இதைத்தாண்டி, சுற்றுலா வருவோருக்கு பொது இடங்களில் குடிநீர் வசதி, சில இடங்களில் முறையான கழிப்பிட வசதி கள் கிடையாது. இரவு நேரங்களில் சாலை யோரங்களில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துவது அதிகரித்து வருகிறது. இதுவெல்லாம் கூட வெளி மாநில சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.

களத்தில் இறங்கி சரி செய்ய நினைத்தால் ஓரிரு நாட்களில் இதையெல்லாம் சரி செய்து விடலாம். புத்தாண்டுக்குள் இதையெல்லாம் சரி செய்ய அரசு உரிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் விருப்பம். உள்ளூர் மக்களின் விருப்பமும் அதுவே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x