Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

தமிழகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து - கடந்த 7 மாதங்களில் ரூ.1,600 கோடி கோயில் நிலங்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்துரூ.1,600 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பெரியமலை மீது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு மலையில் உள்ள 1,305படிக்கட்டுகளில் நடந்து சென்றுசுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.பக்தர்களின் வசதிக்காக ரோப் கார்அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, ரோப் கார் வசதி அமையும் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக முதல்கட்டமாக ரூ.11 கோடியில் அடிப்படை தேவைகள் மேற்கொள்ளும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

கடந்த காலங்களில் ஒரு சம்பிரதாயத்துக்காக இருந்த இந்து சமய அறநிலையத் துறையை, முதல்வர் ஸ்டாலின் தற்போது மாற்றியமைத்துள்ளார். கடந்த 7 மாதங்களில் 551 கோயில்திருப்பணிகளுக்கு உத்தரவிட்டதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் துறையாகமாற்றியுள்ளார். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.1,600 கோடி மதிப்புள்ள இறைவனின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன

தமிழகத்தில் பிரசித்திபெற்ற 47 கோயில்களின் வளர்ச்சிக்காக ஒரு வரைவு திட்டத்தை தயாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில்கள் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்குள் செய்வார்.

சோளிங்கர் சின்னமலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்குடமுழுக்கு விழா கடைசியாக1967-ம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் முதல்வரின் அனுமதியுடன் சின்னமலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில்அறங்காவலர் குழு தலைவராக என்னை நியமித்தார்கள். அப்போது, கோயில் கோபுரத்துக்கு தங்க முலாம் பூச நடவடிக்கை எடுத்து நன்கொடையாளர்கள் உதவியுடன் செயல்படுத்தினோம். அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் கோயிலுக்கு எந்த வளர்ச்சிபணியையும் செய்யவில்லை. இப்போது திமுக ஆட்சி மீண்டும்வந்துள்ளது. கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அனைத்துப் பணிகளும் நடைபெறும்.

இங்கு தங்கும் விடுதிகள், பூங்காக்கள், வாகனம்நிறுத்துமிடம், குடிநீர் வசதிகள்6 மாதங்களுக்குள் ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x