Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

- தேனி மாவட்டத்தில் - கனமழையால் கரைகளைக் கடந்த ஆறுகள் : வயல்களில் புகுந்த வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கின

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல ஆறுகளில், கரைகளைக் கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து வயல்களுக்குள் புகுந்தது. வைகை அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரம்கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூலவைகை, சுருளியாறு, வராகநதி, மஞ்சளாறு ஆகியவற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளைக் கடந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது.

குறிப்பாக, முல்லை பெரியாற்றில் அதிக நீர்வரத்தால் சின்னமனூர், வீரபாண்டி, சீலையம்பட்டி, போடேந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வயல்களில் வெள்ள நீர் புகுந்தது. கரையோரம் வளர்ந்திருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வைகை அணை

வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் அருகே நேர்த்திக்கடன் செலுத்தும் பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

வைகையின் துணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 70.2 அடியாக உள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு தண்ணீர் வெளியேற்றம் 11,559 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அபாய எச்சரிக்கை

இதனால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதிக தண்ணீர் செல்வதால் கரையோரம் வசிப்போருக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x