Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு - நிவாரணம், பயிர்க் கடன்களை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தேவையான அளவு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நீங்கள் வாங்கிய நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் மேடைக்கு மேடை பேசி, மக்களைநகைக்கடன் வாங்க தூண்டி வந்தனர். ஆட்சியையும் பிடித்தனர்.

இவர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி விவசாயிகள், வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் என பலரும் 5 பவுன் வரை கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து நகைக்கடன்கள் பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கிகளும் நகைக் கடன் வழங்கஒதுக்கப்பட்டிருந்த நிதியுடன்,பருவகாலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக வழங்க ஒதுக்கப்பட்ட நிதியையும், நகைக் கடனுக்காக வழங்கிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு பயிர்க் கடன்வழங்க கூட்டுறவு கடன் சங்கங்களிடம் போதிய நிதி இல்லை.

தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் நகைக் கடன் தள்ளுபடி என பெயரளவில் அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் வழங்கிய நகைக் கடன் தள்ளுபடி பற்றி எந்த விவரமும் அதில்இல்லை. ஆனால், எப்போதும்போல திமுக அரசோ, பயிர்க் கடன் வழங்க தேவையான அளவு நிதி கூட்டுறவு சங்கங்களிடம் உள்ளது என்று தெரிவிக்கிறது.

ஆனால், உண்மையில் கூட்டுறவு சங்கங்களிடம் பயிர்க் கடன் வழங்க நிதி இல்லாததால், விவசாயிகள் அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், உரங்கள்அதிக விலைக்கு விற்கப்படுவதுடன், தேவையற்ற பொருட்களைவாங்கும்படி விவசாயிகளை கடைக்காரர்கள் வற்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

தமிழகத்தில் பருவமழை அதிகம் பெய்வதால், பல மாவட்டங்களில் விவசாயிகள் கடன் பெற்று பயிரிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அவர்கள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை மற்றும் இயற்கை சீற்றத்தின்போது அதிமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நானே பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, உடனுக்குடன் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன். பயிர்ப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசுஇதுவரை விவசாயிகள் துயர் தீர்க்கவும், வயல்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, பருவமழை பாதித்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றுவதுடன் பாதிப்படைந்த பயிர்களை கணக்கிட்டு பயிர் இழப்பீட்டை உடனே அறிவிக்க வேண்டும். தேவையான அளவு உரங்கள் சரியான விலையில் கிடைக்கவும், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் கிடைக்க நிதிஇருப்பை உயர்த்தவும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கிகள், தனியார் வங்கிகளிலும் 5 பவுன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x