Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் - ‘விடுதலை போரில் தமிழகம்’ புகைப்படக் கண்காட்சி : முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள `விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியை, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நவ. 1-ம்தேதி (இன்று) காலை 11 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார்.

இந்தக் கண்காட்சியில், நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் சிலைகளும், தேசத்தலைவர்களின் அரிய புகைப்படங்களும், அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சி நவம்பர் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி இலவசம்.

மேலும், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து, அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

இந்த கண்காட்சிப் பேருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும்.இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள்,அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x