Published : 24 Oct 2021 03:06 AM
Last Updated : 24 Oct 2021 03:06 AM

நியாயவிலைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் - பனை வெல்லம் விற்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கினார் : துணிநூல் துறை தொடக்கம்; புவிசார் குறியீடு சான்றிதழ்களும் வெளியீடு

நியாயவிலைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கைத்தறி துறையில் இருந்து பிரித்து தனியாக உருவாக்கப்பட்ட துணிநூல் துறையையும் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை, அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றிழ்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் 100 புதியவடிவமைப்புகள் உள்ளிட்டவை அடங்கிய கோ-ஆப்டெக்ஸின் ‘தமிழ்த்தறி’ என்ற தொகுப்பையும் அறிமுகம் செய்தார்.

சரிகை உத்தரவாத அட்டை

கோ-ஆப்டெக்ஸ் சரிகை உத்தரவாத அட்டையையும் அறிமுகம் செய்தார். பச்சிளம்குழந்தைகளுக்கான புதியஆர்கானிக் ஆடை ரகங்களையும் அறிமுகம் செய்தார். கதர்கிராமத் தொழில் வாரியத்தின்புதிய முயற்சியாக, அச்சிடப்பட்ட ஆதிரை கலெக்‌ஷன்ஸ், டிஜிட்டல் பிரின்ட்டிங், கையால்வர்ணம் தீட்டப்பட்ட பட்டுப்புடவைகள், மெல்லிய பருத்திஇழை புடவைகளையும் அறிமுகம் செய்தார்.

ரோஸ், லாவண்டர், சந்தனம், செஞ்சந்தனம் என்ற 4வகை நறுமணங்களில் குளியல்சோப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். நவீனகண்ணாடி பாட்டில்களில் தேன் விற்பனையையும் அறிமுகப்படுத்தினார்.

‘கற்பகம்’ என்ற பெயரில்நியாயவிலைக் கடைகள் மூலமாகவும், பல்பொருள் அங்காடிகளில் ‘கரும்பனை’ என்ற பெயரிலும் பனை வெல்லம் விற்பனை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

கைபேசி செயலி

கதர் கிராமத் தொழில்வாரிய பொருட்களை கொள்முதல் செய்ய, ‘tnkhadi’ என்றகைபேசி செயலியை அறிமுகம்செய்தார். ராமநாதபுரம் சாயல்குடியில் அமைக்கப்பட்ட பனைவெல்லம், பனைப் பொருள் தயாரிக்கும் பயிற்சி மையத்தைதிறந்து வைத்தார். கைத்தறி,துணிநூல் துறையை பிரித்து,தனியாக உருவாக்கப்பட்ட துணிநூல் துறையை தொடங்கி வைத்தார்.

சரிகை ஆலை நிறுவனத்தின் 2019-20 ஆண்டுக்கான தமிழக அரசின் ஈவுத்தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறை செயலர் அபூர்வா, ஆணையர் பீலாராஜேஷ், கைத்திறத் தொழில்வளர்ச்சிக் கழக மேலாண்இயக்குநர் ஷோபனா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் ராஜேஷ், கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர்,மத்திய அரசின் புவிசார் குறியீடுதலைமை கட்டுப்பாட்டாளர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x