Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு - 25% போனஸ் வழங்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை

தமிழக பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு 25 சதவீத போனஸ்வழங்க வேண்டும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தீபாவளிக்கு 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசுப்போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு இன்னும் ஊக்கத் தொகை, முன்பணம் வழங்கப்படவில்லை.

தன்னிச்சையாக அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கம்கைவிடப்பட்டு, அரசே தன்னிச்சையாக ஊக்கத் தொகையை அறிவித்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவில்தான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கரோனா நெருக்கடியை காரணம் காட்டி ஊக்கத் தொகை அளவு 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. தீபாவளி நெருக்கத்தில் வழங்கப்பட்டால் அவர்களது குடும்பங்களால் திருநாளுக்கு தயாராக முடியாது.

எனவே, பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக அறிவித்து அதையும், முன்பணத்தையும் நடப்பு வாரத்துக்குஉள்ளாக அனைவருக்கும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20 சதவீத ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்படுவதால், நடப்பு ஆண்டில் அதை25 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x