Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் - கட்சிக்காகவும், மக்களுக்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : அதிமுக பொன்விழா கூட்டத்தில் சசிகலா அழைப்பு

கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் பேசும்போது சசிகலா கேட்டுக் கொண்டார்.

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை சசிகலா ஏற்றினார். அதிமுக கொடி கட்டிய காரில் வந்த அவருக்கு, ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதிமுக பொன்விழா ஆண்டு நினைவு கல்வெட்டையும் அவர் திறந்துவைத்தார். அதில், கழகப் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் எம்.ஜி.ஆர் பேரன் எழுதிய, “எனக்கு மட்டும் தெரிந்த எம்.ஜி.ஆர்.” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டத்துக்குச் சென்றார். அங்கு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். எம்.ஜி.ஆர். குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடினார். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தியும் ஊட்டிவிட்டும் மகிழ்ந்த சசிகலா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா,ஜானகி ஆகியோரின் படங்களுக்கும் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பொன்விழா கூட்டத்தில் சசிகலா பேசியதாவது: என்னைத் தரக்குறைவாக பேசியதற்காக, இனிமேல் பொதுக்கூட்டங்களில் பேசும்போதுகூட யாரையும் தரக்குறைவாக நமது தொண்டர்கள் பேச வேண்டாம். அதிமுக என்ற ஆலமரத்துக்கு எம்.ஜி.ஆர். விதையாக இருந்தார். ஜெயலலிதா மழையாகப் பொழிந்ததால்தான் கழகம் விருட்சமாக வளர்ந்தது. இன்று நம் கழகத்துக்கு பொன்விழா ஆண்டு. நெருக்கடிகள் என்னை சூழ்ந்தபோதுகூட, கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்துவிட்டுத்தான் சென்றேன்.

என்னால் இந்த இயக்கத்துக்கு எள்முனையளவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன். இப்போது சொல்கிறேன். கழகம்தான் நமக்கு கோயில். எம்.ஜி.ஆரின் தியாகத்தாலும் அம்மாவின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்திருக்கும் கழகத்தை காலம் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

இந்த 50 ஆண்டுகளில் அதிமுக தமிழக மக்களின் அன்பைப் பெற்று 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இந்த இயக்கம் இன்று இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறது என்றால் கழகத்தின் இருபெரும் தலைவர்களும், தொண்டர்களும், தமிழக மக்களும்தான் இதற்கு காரணம். மக்கள் நலனிலும், தொண்டர்கள் நலனிலும் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நாம் தூக்கி எறியப்படுவோம்.

கட்சிக்காக, தொண்டர்களுக் காக, மக்களுக்காக நாம் இணைந்துநிற்க வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்குநாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும். கழகம் வென்றாக வேண்டும். இவ்வாறு சசிகலா பேசினார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்

தி.நகர் எம்ஜிஆர் இல்லம், ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு, அவர் தங்கியுள்ள தி.நகர் இல்லத்துக்கு சசிகலா வந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாம் முழுமூச்சாகப் பணியாற்றி, அதிமுகவை ஒன்றிணைத்து வெற்றி பெறுவோம். அதிமுக இயக்கத்தின் இரு தலைவர்களும் எந்த வழியைப் பின்பற்றினார்களோ, எதைப் பின்பற்றி இந்த இயக்கத்தை வளர்த்தார்களோ, அந்த வழியைப் பின்பற்றுவேன். அவர்கள் இருந்தபோது இருந்த நிலைக்கு அதிமுக திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். எல்லோரையும் ஒன்றிணைத்து, மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x