Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM

தட்டுப்பாட்டை போக்கவும், எதிர்கால தேவையை சமாளிக்கவும் - மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் அதிகபட்ச மின்சாரத் தேவை, கடந்த சில நாட்களாக 13,500 மெகாவாட் என்ற அளவில்தான் உள்ளது. ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவுதான். ஆனால், தமிழகத்தின் மின்னுற்பத்தியும், மின்சாரம்வழங்கி வந்த தனியார் நிறுவனங்களின் மின்னுற்பத்தியும் கணிசமாக குறைந்துவிட்ட நிலையில், கடுமையான மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 2,850 மெகாவாட் வரைமின்சாரம் வாங்கப்பட்டிருக்கிறது. கடந்த 14-ம் தேதி ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17.77 முதல் ரூ.20 வரையும், 15-ம் தேதி ஒரு யூனிட் மின்சாரம் ரூ.12.98 முதல் ரூ.20 வரையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடுமின்சார வாரிய உயரதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.4.87 மட்டும்தான். புனல் மின்சாரம் 77 பைசாவுக்கும், எரிவாயு மின்சாரம் ரூ.2.81-க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவைவிட 5 மடங்குக்கும் கூடுதலான விலை கொடுத்து வெளிசந்தையில் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.

இதேநிலை இன்னும் சில காலம் நீடித்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் சீர்செய்ய முடியாத அளவுக்கு நிலைகுலைந்து விடும். மின் தட்டுப்பாடு எந்த அளவில் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, போதிய முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகவும் அதிகம் ஆகும்.

ரூ.1.59 லட்சம் கோடி கடன்

தமிழக அரசும், மின்சார வாரியமும் ஒரு விஷயத்தை மட்டும்கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கெனவே ரூ.1.59 லட்சம் கோடிகடனில் சிக்கித் தவிக்கிறது.

மின் வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இந்தக் கடனையும், இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. அதற்கேற்ற வகையில் இப்போதைய மின் தட்டுப்பாட்டை போக்கவும், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்கவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x