Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

மருத்துவ ஒப்பந்த பணியாளர்களை - பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஒப்பந்த அடிப்படையில் ஒருசில மாதங்கள் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை நிரந்தரம் செய்யவாய்ப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு குழுமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சித்தா, இந்திய முறை மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 20 மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஆணைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 28,100 பேருக்கு 30 சதவீதஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.89 கோடி கூடுதல் செலவாகும்.

நீங்கள் பொறுமையாக காத்திருந்ததன் பலனாக, தற்போது ஊதியஉயர்வு கிடைத்துள்ளது. ஆனால்,இரண்டு மூன்று மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் சிலரது தூண்டுதலின்பேரில் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 பேர் என்னைசந்தித்து 4 மாதங்களாக பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு கோரினர். நாட்டில் எங்கும் இதுபோல ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை எடுத்துரைத்தோம்.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை அதிகாரிகளை வரும் 4-ம்தேதி (நாளை) சந்தித்து உரிய ஆவணங்களை வழங்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ்அகமது, சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, மருத்துவக் கல்விஇயக்குநர் நாராயணபாபு, பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ மாணவர் தேர்வுக் குழு செயலர் வசந்தாமணி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x