Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் - திமுக சார்பில் டாக்டர் கனிமொழி, ராஜேஸ்குமார் மனு தாக்கல் : வேறு கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகின்றனர்

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஸ்குமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக எம்.பி. முகமத்ஜான்மறைவு மற்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் எம்எல்ஏ ஆனதால் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தது ஆகியவற்றின் காரணமாக, தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாகின.

போட்டியின்றி தேர்வு

முகமத்ஜான் மறைவால் ஏற்பட்ட உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியான 2 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட டாக்டர் கனிமொழி, (கே.பி.முனுசாமி ராஜினாமாவால் காலியான இடம்), கேஆர்என் ராஜேஸ்குமார் (ஆர்.வைத்திலிங்கம் ராஜினாமாவால் காலியான இடம்) ஆகியஇருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரியும், தமிழக சட்டப்பேரவைச் செயலருமான கே.சீனிவாசனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர் 22-ம் தேதி) கடைசி நாள். தாக்கலான வேட்புமனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற 27-ம் தேதி கடைசி நாளாகும். போட்டி ஏற்பட்டால் அக்டோபர் 4-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சுயேச்சைகளின் மனுக்கள்

திமுக வேட்பாளர்கள் தவிர அரசியல் கட்சிகள் சார்பில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. விதிகளின்படி எம்எல்ஏக்கள் முன்மொழியாததால் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ள டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஸ்குமார் ஆகியஇருவரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

ஆர்.வைத்திலிங்கம் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் வரும் 2022 ஜூன் வரையிலும், கே.பி.முனுசாமி வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் 2026 ஏப்ரல் மாதம்வரையிலும் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x