Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

புதுச்சேரியில் மனுத்தாக்கல் இன்று நிறைவு - மாநிலங்களவை எம்பி வேட்பாளரை பாஜக நிறுத்துகிறது :

புதுச்சேரிக்கான மாநிலங்களவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் இன்று நிறைவடைய உள்ள சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெருவாரியான எம்எல்ஏக்களை கொண்டுள்ள என்ஆர்.காங்கிரஸ், பாஜக இரண்டும் இந்த எம்பி பதவியை பெற விரும்பியது. தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்தும் வகையில் பாஜகவைச் சேர்ந்த் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

இதுபற்றி பாஜக தரப்பில் விசாரித்தபோது, "முதல்வர் ரங்கசாமியிடம் பாஜக தலைமை நேரடியாக பேசியதில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு தர சம்மதம் தெரிவித்துள்ளார். எம்.பி. யார் என்பதை கட்சித்தலைமை தெரிவிக்கும். இன்று அவர் மனுக்தாக்கல் செய்வார்" என்கின்றனர்.

பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி நடந்து வரும் சூழலில் முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார்.

என்.ஆர்.காங். நிபந்தனை

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் உயர் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பாஜகவுக்கு எம்.பி. பதவியை விட்டு தந்துள்ளோம். கடந்த முறை என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த முதல்வர் ரங்கசாமியின் நண்பர் கோகுலகிருஷ்ணனை கடைசி நேரத்தில் அதிமுகவில் சேர்த்து எம்பியானார்.

கடந்த முறையை போல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை பாஜகஉறுப்பினராக்கி எம்பி பதவி அவருக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் வைத்துள்ளார். விரைவில் அதற்கான விடை தெரியும்" என்ற குறிப்பிடுகின்றனர்.

புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த தேர்தலில் 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதமும் வழங்கியிருந்தனர்.

பாஜக சட்டமன்ற கட்சித்தலைவரை தேர்வு செய்யும் முதல் கூட்டத்திலிருந்து தொடர்ந்து அவர்கள் பாஜக கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். எஞ்சிய 3 சுயேச்சைகளான சிவா, நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் யாருக்கும் ஆதரவு என தெரிவிக்கவில்லை. இவர்கள் 3 பேரும் ஏற்கெனவே என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள். கூட்டணியில் மாற்று கட்சிகளுக்கு தங்கள் தொகுதி ஒதுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றவர்கள். இவர்கள் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மாநிலங்களவை எம்.பி. விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்திய என்.ஆர்.காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் இவர்கள் மூவரும் பங்கேற்றனர். இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸுக்கு 3 சுயேட்சைகள் ஆதரவு உள்ளது தெரிந்தது. இதனால் என்.ஆர்.காங்கிரஸின் பலம் பேரவையில் 13-ஆக உள்ளது.

அதே நேரத்தில் பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், நியமன எம்எல்ஏக்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x