Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

100 ஆண்டுகளுக்கு முன்பே - பெண்ணுரிமைக்கு வித்திட்டவர் பாரதியார் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம்

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்ற பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதியார் மற்றும் வ.உ.சி. குறித்த நூல்களை வெளியிட்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார். அருகில் கடம்பூர் ராஜு எம்எல்ஏ. படம்: என்.ராஜேஷ்

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில் நடைபெற்ற பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அங்குள்ள பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் பாரதியார் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி, பாரதி மற்றும் வ.உ.சிதம்பரனார் குறித்த நூல்களை வெளியிட்டார். அவற்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “ பெண்களுக்கென தனி பத்திரிகை நடத்தியவர் பாரதியார். தனது மனைவியை அழைத்துச்செல்லும் போது, அவரது தோளில் கைவைத்து, தோழனுடன் நடப்பது போல் நடப்பார். இன்று சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள், அதை செயலில் காட்டுவதில்லை. 1947-ல் சுதந்திரம் வரும்போது என்ன உற்சாகம் இருந்ததோ, அதை 1921-க்கு முன்பே பாரதியார் பாடிவிட்டார்.

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தை இன்னும் சிறப்பாக வைக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். பாரதியை மறக்கக் கூடாது. அவர் எட்டயபுரத்து சொத்து. அந்த சொத்தை பகிர்ந்து கொடுக்கும் போது அது மேலும் வளரும்’’ என்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ., மத்திய தகவல் ஒளிபரப்பு தென் மண்டல தலைமை இயக்குநர் எஸ்.வெங்கடேஷ்வர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x