Published : 22 Aug 2021 03:13 AM
Last Updated : 22 Aug 2021 03:13 AM

பழநி அருகே மனைவி, மகள், மகனுடன் விவசாயி தற்கொலை : மகனின் உடல்நலப் பிரச்சினையை தீர்க்க முடியாததால் சோக முடிவா?

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவி, மகன், மகளுடன் விஷம் அருந்தியும், மக்காச்சோளம் தட்டைபோருக்கு தீ வைத்து அதனுள் சென்று உடல் கருகியும் தற்கொலைசெய்து கொண்டது குறித்து போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழநி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிசின்னராசு என்ற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18). மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் பழநியிலுள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். முருகேசன் தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் குடியிருந்து வந்தார்.

முருகேசன் நேற்று முன்தினம்குடும்பத்தினருடன் வேலாயுதம்புதூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, அன்று இரவு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அவரது தோட்டத்தில் உள்ள மக்காச்சோளத் தட்டை தீப்பற்றி எரிந்துள்ளது. அருகே தோட்டத்தில் வசித்த அவரது உறவினர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பழநி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, எரிந்து கொண்டிருந்த மக்காச்சோளத் தட்டை போருக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சென்ற போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது முருகேசன், அவரது மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் எனத் தெரியவந்தது.

போலீஸார் நேரில் விசாரணை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தது குறித்து தென்மண்டல ஐஜி அன்பு, டிஐஜி விஜயகுமாரி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி னிவாசன் ஆகியோர் வத்த கவுண்டன்வலசு கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது.

நால்வரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பிரேதப் பரிசோதனையின் முதல்கட்டத் தகவலில் நால்வரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் முருகேசனின் மகன் கார்த்திகேயனுக்கு சிறுநீரகக் கோளாறு பிரச்சினை இருந்து வந்ததாகவும், சிகிச்சை எடுத்தும் பலனில்லாத நிலையில், முருகேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாகவும், அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும் நால்வரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், இவர்கள் மக்காச்சோளத் தட்டை போருக்கு தீ வைத்து அதனுள் சென்று ஏன் இறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் ஆயக்குடி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x