Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

அலுவல் ஆய்வுக் குழுவை புறக்கணித்தது அதிமுக - செப்.21 வரை 29 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் : பட்ஜெட்கள் மீது 4 நாள் விவாதம் நடப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், செப்.21-ம் தேதி வரை 29 நாட்கள் நடக்கிறது. அலுவல் ஆய்வுக் குழுவில் இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 13-ம்தேதி தொடங்குகிறது. அன்றுஅரசின் பொது பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது. 14-ம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கானதனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கூட்டத் தொடரைஎத்தனை நாட்கள் நடத்துவது என்றுமுடிவு செய்வதற்காக, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்றுகாலை நடந்தது. பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடந்த கூட்டத்தில் அவை முன்னவர் துரைமுருகன், மூத்த அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜி.கே.மணி(பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்தியகம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது:

சட்டப்பேரவையில் ஆக.13-ம்தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர்தாக்கல் செய்கிறார். இது காகிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல்செய்யப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது மேஜையில் கணினி வைக்கப்படும்.நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்க வாசிக்க, கணினியில் அந்த வாசிப்பின் பகுதி வந்து கொண்டிருக்கும். அதன் அருகில் அவர்களுக்கு, கையடக்க கணினிவைக்கப்பட்டிருக்கும். அதில், புத்தகத்தில் இருப்பது போன்று பக்கங்களை பார்த்துக் கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் வரை, காகித வடிவிலும் பட்ஜெட் உள்ளிட்டவை வழங்கப்படும்.

ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதுபோல, தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விதிகள் குழு கூடி முடிவெடுத்தது. அதன்படி, ஆக.14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மானியக் கோரிக்கைகள்

பட்ஜெட் மீது 16-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடக்கும். விவாதத்துக்கு நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் பதில் உரை அளிப்பார்கள்.

ஆக.23 முதல் செப்.21-ம் தேதி வரை 23 நாட்கள் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். கரோனா காலம் என்பதால், பல கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. போதிய அளவுக்கு பதில் வந்ததும் கேள்வி நேரம் இடம்பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆக.23-ம் தேதி நீர்வளத் துறை, 24 - நகராட்சி நிர்வாகம், 25 - ஊரக வளர்ச்சி, 26 - கூட்டுறவு, உணவு, 27- உயர்கல்வி, பள்ளிக்கல்வி,28 - நெடுஞ்சாலைகள், பொதுப்பணி (கட்டிடங்கள்) ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. இடையில், ஆக.29, 30, செப்.5, 10, 11, 12, 19 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. செப். 18, 20 ஆகிய2 நாட்களும் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. நிறைவு நாளான செப்.21-ம் தேதி அரசினர்சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்படும். மொத்தமாக ஆக.13 முதல் செப்.21-ம் தேதி வரை 29 நாட்கள் அவை அலுவல்கள் நடக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x