Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

‘பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இப்படி செய்யலாமா?' - மாநகராட்சி கட்டிடத்தை உடனே காலி செய்ய அதிமுக முன்னாள் எம்பிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு :

எம்பி அலுவலகமாகப் பயன்படுத்திய மாநகராட்சி கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்மதுரை மக்களவை உறுப்பினராகபதவி வகித்தபோது, தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் எம்பி அலுவலகம் செயல்பட்டது. எம்பியின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த அலுவலகத்தை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்தேன். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

தேர்தல் நடத்தை விதிப்படி மாநகராட்சி கட்டிடத்தை கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தக்கூடாது என கூறி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்து பல மாதங்களாகியும் அலுவலகத்தை திறக்க அனுமதி தரவில்லை. எனவே எனது அலுவலகத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பதவிக் காலம் முடிந்ததும் அரசுக்குச் சொந்தமான இடங்களைக் காலி செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மாநகராட்சி கட்டிடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இவ்வாறு செயல்படலாமா? மனுதாரர் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தை உடனே காலி செய்ய வேண்டும்.வாடகை பாக்கியை மனுதாரரிடம் அதிகாரிகள் முழுமையாக வசூலிக்க வேண்டும். மனுதாரருக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துசெல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x