Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

புதுச்சேரியில் அரசு மரியாதையுடன் அஞ்சலி - முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார் : தமிழக அரசு மரியாதையுடன் இன்று இடைச்செவலில் இறுதிச் சடங்கு

வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ என போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 99. இதையடுத்து புதுச்சேரி அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான இடைசெவலுக்கு நேற்று உடல் ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்டது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1923-ம் ஆண்டு செப்.16-ல் பிறந்தவர் கி.ராஜநாராயணன். இவரது முழுப்பெயர், ராயங்குல  கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் 5-வது பிள்ளை கி.ரா.

7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர். அவரது மனைவி கணவதி அம்மாள் உதவியுடன் விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னரே எழுத்தாளர் ஆனார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார். வாய்மொழிக் கதை சொல்லும் மரபை தனது படைப்பின் அடிப்படையாகக் கொண்டிருந்தார்.

7-ம் வகுப்பே படித்து இருந்தாலும், தனது எழுத்து ஆளுமையால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். புதுச்சேரி லாஸ்பேட்டையில், புதுவை அரசு அளித்த வீட்டில் அவர் வசித்து வந்தார்.

ஆளுநர், தலைவர்கள் அஞ்சலி

வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் கி.ராஜநாராயணன் காலமானார். அவரது உடல் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏக்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு கி.ரா உடலுக்கு புதுச்சேரி அரசு தரப்பில் போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன் (என்.ஆர்.காங்), சிவா (திமுக), வைத்தியநாதன் (காங்), கல்யாணசுந்தரம் (பாஜக) மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசு மரியாதை

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுச்சேரியில் இருந்து கோவில்பட்டி இடைச் செவல் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நேற்றிரவு எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இடைசெவலில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சாகித்ய அகாடமி விருது

கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புற கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியாகியுள்ளது. கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியாவார். இவரது ‘கிடை’என்ற குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமானது.

கி.ரா.வின் மனைவி கணவதி அம்மாள் 2019-ம் ஆண்டு செப். 25-ல் உடல்நலக் குறைவால் காலமானார். கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கான உரிமை, டிசம்பர் 26, 2020 முதல், வாசகரான புதுவை இளவேனில், தனது மகன்கள் திவாகரன், பிரபாகர் ஆகியோரை சேரும் என எழுதி வைத்துள்ளார். இந்த மூவரும் தனது படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை ‘கரிசல் அறக்கட்டளை’ எனத் தொடங்கி, எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தனது பெயரில் பணமுடிப்புடன் கூடிய விருதினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக எழுத்துப் படைப்புகள் அனைத்தையும் வாசகர் ஒருவருக்கு எழுத்தாளர் எழுதி கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை.

கரோனா காலத்திலும் கைப்பிரதியாக ‘அண்டரெண்டப்பட்சி’ என்ற புத்தகத்தை கி.ரா எழுதியுள்ளார். இதை அச்சில் ஏற்றாமல் கைப்பிரதியாகவே வாசகர்கள் படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வெளியிட்டுள்ளார். தான் எழுதாமல் விட்ட கதைகளை தொகுப்பாகக் கொண்டு ‘மிச்ச கதைகள்’ என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்டார்.

எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு

இடைச்செவலில் கி.ரா.வின் இளைய மகன் பிரபாகரனின் மகள் அம்சா வசிக்கிறார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாத்தா இறுதி வரை எழுத்து உலகிலேயே இருந்தார். எழுத்து தான் அவருக்கு தைரியத்தை கொடுத்தது. அவருக்கு அரசு மரியாதை என்பது, எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x