Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கடன் பிரச்சினையால் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை : உசிலம்பட்டியில் பரிதாப சம்பவம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கடன் பிரச்சினையால் நேற்று காலைஒரே குடும்பத்தைச் சேர்ந்த நகைப் பட்டறை உரிமையாளர், அவரது மனைவி உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கரோனா ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை ஆர்.கே. தேவர் தெருவில்வசித்தவர் அய்யாவு. உசிலம்பட்டி பஜார் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வந்தார். இவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில், அவரது மகன் சரவணன் (35) நகைப் பட்டறையைத் தொடர்ந்து நடத்தினார். அவரது மனைவி விஜி(எ) பூங்கோதை (24). மகள்கள் மகாலெட்சுமி (10), அபிராமி (6), மகன் அமுதன் (5).

இந்நிலையில் தொழிலை விரிவுபடுத்துவதற்காக சரவணன் சிலரிடம் சிறுக, சிறுக கடன் வாங்கியுள்ளார். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனுக்குவட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது கடன் சுமை வெகுவாக அதிகரித்து அவர்கள் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போதும் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அவரது தொழில் அடியோடு முடங்கியது. வாங்கிய கடனுக்கு வட்டிசெலுத்த முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாமலும் சரவணன் சிரமப்பட்டார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று காலை சரவணனின் மூத்த மகள் அருகேயுள்ள கடையில் வழக்கம்போல் பால் வாங்கிச் சென்றுள்ளார். அதன்பின்பு, காலை 11 மணி வரை அவரது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர். கதவை உடைத்துப்பார்த்தபோது சரவணன் குடும்பத்தினர் அனைவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கணவன், மனைவி இருவரும் இரு மகள்கள், மகனுக்கு விஷம்கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம். இச்சம்பவத்துக்குக் கடன் தொல்லையே காரணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் சரவணன் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அக்கடிதத்தில், ‘‘எங்களது இறப்புக்கு யாரும்காரணம் இல்லை. கடன்நெருக்கடியே காரணம். நகைப்பட்டறைக்காக என்னிடம் ரூ.30 லட்சம் கேட்டு தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனால் மன உளைச்சல் அடைந்தேன்’’ எனக் குறிப்பிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கரோனா ஊரடங்கால் தொழில் முடக்கம், கடன் நெருக்கடி ஆகியவற்றால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம், உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x