Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

50 சதவீதத்துக்கும் அதிகமான படுக்கைகளை ஒதுக்குங்கள் - கரோனா சிகிச்சை கட்டணத்தை குறைக்க வேண்டும் : தனியார் மருத்துவமனைகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்குவதுடன் கட்டணத் தையும் குறைக்க வேண்டும் என்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா 2-வது அலை மிக மோசமானதாக இருக்கிறது. நோய்ப் பரவலை தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக நலப்படுத்துவது ஆகிய இரு நோக்கங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப் பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தாக்கியவர்களை காக்கும் பணியில் மருத்துவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனர்.

‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். ஆக்சிஜன் தேவை, அதன் இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு,தேவை ஆகியவற்றை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தெரிந்துகொண்டு, ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும்.

எந்த இடத்தில் இருப்பு உள்ளது, எந்த இடத்துக்கு அதிகமாகத் தேவை என்ற இரண்டுதகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக இது இருக்கும். குறிப்பாக, ஆக்சிஜன் இருப்பு தகவல்கள்தான் இதில் முக்கியமானதாக இருக்கும். இந்தத் தகவல்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும்அறிவுறுத்தியிருக்கிறேன். போர்க்காலத்தில் செயல்படுவதைபோல நம்முடைய மருத்துவர்கள் செயல்பட்டு மக்கள் சேவையாற்றுவர்.

நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய, முறையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் அளித்து வருகின்றன. குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது. தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கரோனா பரவல் அதிகமாவதும், ஆக்சிஜன் தேவை கூடுதலாக ஆகிக் கொண்டு போவதுமான சூழலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகளும் துரிதமாக செயல்பட்டாக வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கவேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி தனியார் மருத்துவமனைகள் 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

இது மருத்துவ அவசரநிலை காலமாக மாறிவிட்டது. உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.எனவே, தனியார் மருத்துவமனைகள், 50 சதவீத படுக்கைகளைத் தாண்டியும் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவற்றை உயிர்ப் பாதுகாப்புக்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஒதுக்காமல், கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.

தங்களிடம் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அதில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றைத் தனியார் மருத்துவமனைகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், கட்டணத்திலும் முடிந்த அளவு சலுகை காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி அவர்கள் உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.

இது கடினமான காலம். ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் நம்உயிரைக் காப்பாற்றி எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் வடிவமைக்க முடியும். உங்கள் ஒவ்வொருவர் உயிரும் உன்னதமானது என்பதும், கவனக் குறைவால் அதை வீசியெறிந்திடக் கூடாது என்பதுமே எங்களது முதன்மையான குறிக்கோளாகும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x