Published : 05 May 2021 03:13 am

Updated : 05 May 2021 03:13 am

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோ - சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் மீது தாக்குதல்; திமுக தொண்டர்கள் 2 பேர் கைது : ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் நேற்று சிலரால் சேதப்படுத்தப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் மற்றும் சிதறிக் கிடக்கும் காய்கறிகளை சேகரிக்கும் பணியாளர்கள்.படங்கள்: ம.பிரபு

சென்னை

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் மீது தாக்குதல்நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திமுக தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை முகப்பேர் கிழக்கு, 10-வது பிளாக், பட்டினத்தார் சாலையில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேற்று காலை 10.40 மணி அளவில்திமுகவை சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டைகளுடன் வந்து, அங்கு மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை உடைத்துள்ளனர். பெயர் பலகையையும் சேதப்படுத்தி வெளியே எடுத்து வந்து வீசினர்.


உணவு தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், மளிகைபொருட்களையும் சேதப்படுத்தி சூறையாடியுள்ளனர். தயார் செய்யப்பட்டிருந்த உணவுகளையும் தூக்கி வீசியுள்ளனர். பணியாளர்களையும் மிரட்டி வெளியே விரட்டியுள்ளனர். இனி அம்மா உணவகம் செயல்படாது என ஆவேசமாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தகவல் அறிந்து அதிமுகவினர், பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி ஜெ.ஜெ.நகர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்தில் தூக்கி வெளியே வீசப்பட்ட புகைப்படங்களையும் அம்மா உணவகபெயர் பலகையையும் சரிசெய்தனர். அதை புகைப்படம், வீடியோவாகவும் வெளியிட்டனர்.

இந்நிலையில், அம்மா உணவகம் சூறையாடப்பட்டது தொடர்பாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையபோலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாகமுகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த நவசுந்தர், சுரேந்தர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

“திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடைபெறும்” என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் பிரச்சாரம் செய்தன. இந்நிலையில் புதிய ஆட்சி பதவியேற்கும் முன்பே,அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதில் 10 பேர் வரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்சியைவிட்டு நீக்கம்

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கூறும்போது, “இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தவறு செய்தால் திமுகவினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்மா உணவகத்தில் கிழித்து எறியப்பட்ட பேனர்கள் ஒட்டப்பட்டுவிட்டன” என்று தெரிவித்தார்.

தலைவர்கள் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமையப் போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, திமுகவினரின் வன்முறையும், அரசியல் அநாகரிகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல.

எவர் ஒருவரும் பசிப்பிணியால் வாடக்கூடாது என்று ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டம் இது. பெருமழை, பெரு வெள்ளம் தொடங்கி, கரோனாபேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரமாம் அம்மாஉணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். சட்டம்ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எது நடந்துவிடக்கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஏழை, எளியமக்கள் பயன்பெறும் உணவகத்தில் திமுகவினர் இப்படி நடந்துகொண்டது வேதனை அளிக்கிறது. திமுகவினர் ஒருபோதும் திருந்தவேமாட்டார்கள் என்பதற்கு இந்தசம்பவமே சாட்சி.

தொடர்ந்து இயங்கும்

இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அம்மா உணவகம் திட்டத்தை நிறுத்துமாறு அரசு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. அனைத்து அம்மா உணவகங்களும் வழக்கம்போல தொடர்ந்து செயல்படும்” என்று கூறினர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x