Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மதுரை அரசு மருத்துவமனையில் - 8 ‘ரெம்டெசிவர்’ பெட்டிகள் திருட்டு : ஊழியர்கள், செவிலியரிடம் போலீஸார் தீவிர விசாரணை

மதுரை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் செலுத்தும் முக்கிய ஊசி மருந்தான ரெம்டெசிவர் குப்பிகள் அடங்கிய 8 பெட்டிகள், மதுரை அரசு மருத்துவமனையில் திருடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தும் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு முதல் தளத்திலுள்ள வார்டில் சிலருக்கு ‘ரெம்டெசிவர் ’ மருந்து செலுத்த வேண்டி இருந்ததால் கடந்த மே 2-ம் தேதி 9 மருந்து பெட்டிகளைக் கொண்டுவர, மதுரை ஆட்சியர் வளாக பகுதியில் செயல்படும் மருந்து குடோன் நிர்வாகத்துக்கு சம்பந்தப்பட்ட வார்டு மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடோன் ஊழியர் ஒருவர் 9 ரெம்டெசிவர் மருந்து பெட்டிகளை கொண்டு வந்து, கரோனா வார்டில் வைத்துவிட்டு, அங்குள்ள செவிலியர்களிடம் கூறிச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து, அங்கு பணியில் இருந்து செவிலியர் ஒருவர், நோயாளிகளுக்கு மருந்து செலுத்த ரெம்டெசிவர் பெட்டியைத் திறந்தபோது, ஒன்றில் மட்டுமே மருந்து இருந்ததும், எஞ்சிய 8 பெட்டிகளில் மருந்து பாட்டில் இல்லாமல் காலியாக இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டீன் சங்குமணி உத்தரவின்பேரில் மதிச்சியம் காவல் நிலையத்தில் மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) சையது அப்துல்காதர் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஊழியர்கள், செவிலியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக மதிச்சியம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தேவகி வழக்குப் பதிவு செய்தார். இதற்கிடையே ரெம்டெசிவர் மருந்தை குடோனில் இருந்து கொண்டு சென்று வழங்கிய ஒப்பந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒரு மருந்து பெட்டியின் விலை ரூ. 4 ஆயிரத்துக்கு அதிகம். இம்மருந்துக்கு வெளியில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கில் திருடிச் சென்றிருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x