Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

நாகர்கோவில் அருகே விஷம் கொடுத்து மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை தீராத நோயால் மகன் அவதிப்பட்டதால் பரிதாப முடிவு

நாகர்கோவில் அருகே மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட தொழிலாளி கண்ணன்.

நாகர்கோவில்

நாகர்கோவில் அருகே மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே சுண்டப்பற்றிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன் (42). தச்சுச் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி(38). இவர்களுக்கு அனுஷ்கா(11), விகாஷ் (5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

விகாஷுக்கு பிறந்தது முதல் சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்தது. பல மருத்துவமனைகளில் அதிகம் செலவு செய்து மருத்துவம் பார்த்தும் குணமடையவில்லை. மூச்சுத்திணறலால் விகாஷ் சிரமம் அடைந்ததைப் பார்த்து கண்ணனும், சரஸ்வதியும் மனவேதனை அடைந்தனர்.

மகனின் மருத்துவத்துக்கு கடன்வாங்கி கண்ணன் செலவு செய்ததால், கடன் தொல்லையாலும் அவர் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தூங்கச் செல்லும்முன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் மூவரும் உயிரிழந்தனர். பின்னர், கண்ணன்தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் கண்ணனின் வீடு திறக்காததால் சந்தேகமடைந்த பக்கத்துவீட்டினர் அங்கே சென்று பார்த்தபோதுதான் 4 பேரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஈத்தாமொழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x