Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறியாமல் ஜெ. நினைவிடம் திறப்பது நியாயமா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்

சென்னை

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறியாமல், அவருடைய நினைவிடம் திறப்பது நியாயமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் சுப.சிவப்பிரகாசத்தின் பேரனும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளருமான சி.இலக்குவன் - சவுமியா மேகா திருமண விழா சென்னை, கிண்டியில் நேற்று நடைபெற்றது,

இவ்விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சீர்திருத்த திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் போராடினார்கள். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் எந்தவித தொய்வும் வந்துவிடக் கூடாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவை வேண்டாமென்று நான் மறுக்கவில்லை.

ஆனால் திறப்பு விழா நடத்தக் கூடியவர்கள் யார், அந்த நினைவிடத்துக்கு உரியவர் யார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடக்கிறது. ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு 42 மாதங்களாகிறது.

விசாரணை வேண்டும் என்று கேட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே இந்த ஆணையத்தில் ஆஜராகவில்லை. இந்த ஆணையத்தின் பதவிக் காலம் 10 முறை நீட்டிக்கப்பட்டும் உண்மை வெளிவரவில்லை. இந்த நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா என்பதுதான் எனது கேள்வி. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x