Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க சபதமேற்போம் என அதிமுகவினருக்கு அழைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க சபதமேற்போம் என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதியில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2017 ஜூன் 28-ம் தேதி முதல்வர் பழினிசாமி அறிவித்தார். அதன்படி, 50,422 சதுரடியில் நினைவிடம் அமைக்க ரூ.50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 2018 மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்பின் கட்டுமானப் பணிக்கான கூடுதல் நிதி மற்றும் பராமரிப்புக்கான நிதி என ரூ.79 கோடியே 75 லட்சமாக ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பு கொண்ட இந்த நினைவிட வளாகத்தில், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல் நடைபாதை, புல்வெளி, நீர்த்தடாகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான கல்வெட்டை திறந்து வைத்த முதல்வர், தொடர்ந்து ரிப்பன் வெட்டி நினைவிடத்தை மக்கள் பார்வைக்காக திறந்துவைத்தார்.

அதன்பின், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் பி.தனபால், தலைமைச் செயலர் கே.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தை ஒருங்கிணைத்து, பொதுச்செயலாளராக பதவியேற்று வழிநடத்தியதுடன், தமிழகத்தின் முதல்வராக பதினைந்தரை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் ஜெயலலிதா. ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி, இரும்பு மங்கை என பெயர் பெற்றார்.

தாய் தன் பிள்ளைகளை காப்பது போல், தமிழக மக்களை கவனித்து, ஏழை மக்களை கருத்தில்கொண்டு பல்வேறு முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தினார். சுனாமி, மழை வெள்ளம் என இயற்கை பேரிடர்களின்போது அரசு இயந்திரம் முழுமையாக இயங்க முன்மாதிரியாக இருந்தார். ஒரு தலைவனுக்குரிய ஆளுமைகளாக என்னென்ன கூறப்படுமோ அவை அத்தனையும் ஜெயலலிதாவின் இயல்பான குணங்களாக இருந்துள்ளன. தமிழக மக்களின் நல்வாழ்வு, மாநில வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், மக்கள் பணிகள் என அனைத்தும் தமிழகத்தின் சமகால வராலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.

தற்போது திறக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின், பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தந்தை கருணாநிதி இறந்தபோது, இதே பகுதியில் அடக்கம் செய்யப்படும் நிலையில், வழக்குகளை இரவோடு, இரவாக நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றார். இதன்மூலம் ஸ்டாலினின் கபட நாடகத்தை உலகமே அறிந்துள்ளது. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சியும், ஆட்சியும் தொடரும் என்றார் ஜெயலலிதா. அந்த சூளுரையை ஏற்று, சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். அதுதான் நம் லட்சியம், நன்றிக்கடன் என்று ஒவ்வொரு தொண்டனும் உணர வேண்டும். திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து இதே நினைவிடத்தில் நாம் நன்றி செலுத்த வீர சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘அரசு சார்பிலான நினைவிடம் என்று குறிப்பிடப்பட்டாலும், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இது ஜெயலலிதாவின் நினைவு ஆலயமாகும். ஜெயலலிதாவுக்கு விசுவாச தொண்டர்களாகிய நாம் இதயத்தில் கோயில் கட்டியுள்ளோம். அதுதான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது. இது தமிழகத்தில் தீயசக்திகள் தலையெடுத்துவிடாமல் தடுக்க நாளும் உழைக்க வேண்டும் என்று விசுவாச தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடமாகும். சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற தாங்கள் (ஜெயலலிதா) வழிகாட்ட வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக தமிழர்களின் உயர்வுக்காக உழைக்க எங்களுக்கு ஆசி கூறுங்கள்’’ என்றார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் கே.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x