Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து

முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்று தருமபுரியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு முடிவுக்குப் பின்னர் தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம்.

சசிகலா விரைவில் முழு உடல்நலன் பெற்று வர வேண்டும். சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். நானும் ஒரு பெண் என்ற வகையில் அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்து பலவற்றையும் கவனித்துக் கொண்டவர். எனவே, அவர் அரசியலுக்கு வரலாம்.

மக்களிடம் பெறும் மனுக்கள் மீது 100 நாளில் நடவடிக்கை என்று கூறுகிறார் ஸ்டாலின். ஏற்கெனவே தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள். கடந்த மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், திமுக அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றினார்களா?

முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிமுக கட்சி சார்பாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் அவர்.

அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீடு போன்ற பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்கி முடிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x