Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

நிலம் வாங்கித் தருவதாக ரூ.1,100 கோடி மோசடி வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.207 கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

நிலம் வாங்கித் தருவதாக 12 லட்சம் பேரிடம் ரூ.1,100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.207 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ என்ற நிறுவனம், நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேரிடம் இருந்து மாதத் தவணையில் பணம் வசூல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் புகார்

முதலீடு முதிர்வு பெற்றபின்னரும், அந்நிறுவனம் கூறியபடி, நிலங்கள் வாங்கிக்கொடுக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதுதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி), இந்நிறுவனம் இனிமேல் யாரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மேலும், இந்தமோசடி தொடர்பாக வந்தபுகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

4 பேர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில், இந்நிறுவனம் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனைகள் செய்திருப்பதாகக் கூறி பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அதன் நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணக்குமார் ஆகிய 4 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. அதன்பேரில், உமாசங்கர்உட்பட 4 பேரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த டிச. 10-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

3,520 ஏக்கர் நிலம்

இந்த நிறுவனத்துக்கு சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3,520 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.207 கோடி ஆகும். ‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,137 கோடி வசூல் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x