Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

புதுவையில் காங். உட்கட்சி பூசலால் அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா தீப்பாய்ந்தான் எம்எல்ஏவும் பதவி விலகல்

புதுச்சேரி அரசில் முக்கிய பொறுப்புகளை வகித்து, முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்த நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தார்.

புதுவையில் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வர் ஆனார். அவரை எம்எல்ஏக்கள் ஆதரித்தனர்.

இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தியடைந்தார். கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கியது. அவரிடம், பொதுப்பணி, உள்ளாட்சி, கலால், வீட்டுவசதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

கட்சி மீது கடும் அதிருப்தி

தேர்தலுக்கு பிறகு அமைச்சராக பொறுப்பேற்றும், மாநில தலைவராக நமச்சிவாயம் நீடித்து வந்தார். இந்த நிலையில் அவ்வப்போது நாராயணசாமி, நமச்சிவாயம் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்தாண்டு நமச்சிவாயத்திடம் இருந்து மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் நமச்சிவாயம் மீண்டும் கடும் அதிருப்திக்கு ஆளானார். தனது அதிருப்தியை கட்சித் தலைமைக்கும் தெரிவித்தார். ஆனால், ‘நாராயணசாமி தலைமையில்தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும், அவருக்கு துணையாக இருங்கள்’ என கட்சித்தலைமை உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் புறக்கணிப்பு, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது என நமச்சிவாயம் இருந்து வந்தார். கட்சித் தலைமை நாராயணசாமி, நமச்சிவயாம் இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தியது.

பாஜக வியூகம்

இதனிடையே புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக வியூகம் வகுத்து வந்தது. இதன்படி, நமச்சிவாயம் கட்சியில் இருந்து விலகி மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக தனது ஆதரவாளர்களுடன் கூட்டங்களை நடத்த தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்த நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது வில்லியனூர் தொகுதியில் தேர்வான எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். அவருடன் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.

முதல்வர் அலுவலகத்தில் நாராயணசாமி, முதல்வரின் செயலர் இல்லாததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் அளிப்பதாக அப்போது நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், தனது கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x