Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

காவல் துறையினர் குடும்பத்துக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் பொங்கல் விழாவில் முதல்வர் பழனிசாமி உறுதி

காவல் துறையினருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில், நேற்று முன்தினம் காலை காவலர்களின் குடும்பத்தினருடன் முதல்வர் பழனிசாமி தைப் பொங்கலை கொண்டாடினார். அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

பொங்கல் திருநாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கில புத்தாண்டு, பொங்கல்நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்கு வழங்கினார். அந்த வழியில்தற்போதைய அரசும் இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, நாட்டுக்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்றுவெற்றி நடை போட்டு வருகிறது.வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் காவல் துறை.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ போலீஸாரின் பங்களிப்பு அளவிட முடியாதது. எனவேதான் காவல் துறையினருக்கு ஜெயலலிதாவும் அவரைத் தொடர்ந்து என் தலைமையிலான அரசும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், காவலர் வீட்டுவசதி வாரியத்தை ஏற்படுத்தினார். காவலர் முழு உடல் பரிசோதனை திட்டம், உங்கள் சொந்த இல்ல திட்டம், காவலர் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கினார். பெண் காவலர்களுக்கு பேறுகால விடுப்பை உயர்த்தினார்.

என் தலைமையிலான அரசு, காவலர்களின் மனநலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 4-வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மிகை நேர பணிக்கான மதிப்பூதியத்தை ரூ.200-லிருந்து 500 ஆக உயர்த்த உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தின் அமைதிக்கு துணை நிற்கும் காவல்துறைக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசு என்றென்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவுக்காக ஆயுதப்படை வளாகத்தில் குடிசை வீடுகள்போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி, ஜே.கே.திரிபாதி, சென்னை காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x