Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

‘மாஸ்டர்’படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

சென்னை

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள‘மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில்லலித்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 1,000திரையரங்குகளில் திரையிடப்படஉள்ளது. இப்படத்தின் வெளியிடும் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை அனைத்தும் எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது.

எனவே ‘மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். குறிப்பாக அடையாறு கேபிள் காஸ்ட் நெட்வொர்க், விழுப்புரம் தலைநகர் டிஜிட்டல் கேபிள், ராயப்பேட்டை சி-32 கேபிள்நெட், மந்தைவெளி டீம்ஸ் நெட்வொர்க், தேனாம்பேட்டை எஸ்டிஎன் சேட்டிலைட், பெங்களூரு கம்யூனிகேஷன் கேபிள், திருவனந்தபுரம் ஏசியாநெட் டிஜிட்டல் நெட், புதுடெல்லி டிஇஎன் நெட்வொர்க் ஹோம் சர்வீஸ், கோட்டயம் ஸ்டார்விஷன் கேபிள் டிவி ஆகியோரும், தமிழ்கன், தமிழ்யோகி, தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 400 இணைய தளங்களும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த இணையதளங்கள் மற்றும்கேபிள் ஆபரேட்டர்கள் ஒளிபரப்பவும், இப்படத்தை பதிவிறக்கம்செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல், வோடஃபோன், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘‘கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக திரையிடுவதன் மூலம் படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கேபிள் டிவி மற்றும் இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இணைய தளங்களிலும், கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x