Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

போக்குவரத்து துறை முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

போக்குவரத்து துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து (ஆர்டீஓ) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடம் இருந்து கணக்கில் வராத 117 பவுன் நகை, ரூ.24.16 லட்சம், மதுரை வடக்கு ஆர்டீஓ அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் இருந்து ரூ.1.43லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இது காட்டுகிறது. இதனால், சாதாரண மக்களால் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு போன்றவற்றைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் உள்ள கீழ்நிலை ஊழியர்கள்தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதுபோன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேல்மட்ட ஆதரவு இல்லாமல் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட முடியாது. எனவே, மேல்மட்டத்தில் இருந்து விசாரித்தால்தான் இதுபோன்ற ஊழலுக்கு முடிவுகட்ட முடியும்.

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு காவல் துறை விசாரணையோடு நிறுத்தாமல், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையிலான தொடர்புகள் வெளிவந்தால்தான் போக்குவரத்து துறை மீது படிந்துள்ள கறை நீங்கும். தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்து துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x