Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்போது மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்

சென்னை

சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தனது கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன்படி ரெட்டேரி சந்திப்பு, மகாத்மா காந்தி நகர், ராஜீவ் காந்தி நகர், லட்சுமி நகர்7-வது தெரு, அஞ்சுகம் நகர் 18-வதுதெரு, டீச்சர் கில்டு காலனி,ராஜாஜி நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் மொத்தம் 3,500 பேருக்கு அரிசி - 5 கிலோ, பாய், போர்வை , சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்.

ரெட்டேரி சந்திப்பில் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது ஸ்டாலினுக்கு தலைச் சுற்றல், லேசான மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், ஈசிஜி உள்ளிட்ட ஆரம்பகட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருப்பதால் சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர்.

அதன்படி சிறிதுநேர ஓய்வுக்குப் பிறகு திரும்பிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “லேசான மயக்கம், உடல் சோர்வு இருந்ததால் மருத்துவமனைக்குச் சென்று ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனை செய்து கொண்டேன். மருத்துவர்கள் கூறியபடி சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு செல்கிறேன். மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

பின்னர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டாலின், வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைகளை செய்து கொண்ட பிறகு வீடு திரும்பினார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு நவீன வசதிகளுடன் அலுவலக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரை அமர வைத்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x