Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவு வெளியீடு 5.26 லட்சம் பேரில் 47,157 பேர் தேர்ச்சி

சென்னை

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான நெட் தேர்வு, கடந்த செப்.24முதல் நவ.13-ம் தேதி வரை கணினிவழியில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 225 நகரங்களில் 1,119 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5.26 லட்சம் பேர் எழுதினர்.

விடைக் குறிப்புகள் (கீ ஆன்சர்), கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் கடந்த 30-ம் தேதி வெளியாயின. தொடர்ந்து, நெட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு;

2020 ஜூன் மாதத்துக்கான நெட் தேர்வில் பங்கேற்க 8 லட்சத்து60,976 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் 5 லட்சத்து 26,707 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதியதில் 47,157 பட்டதாரிகள் (8.9% பேர்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 40,986 பேர் உதவி பேராசிரியர் பணிக்கும், 6,171 பேர் ஆசிரியர் பணி மற்றும் அரசின் உதவித் தொகை பெறவும் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கான தேர்ச்சி சான்றிதழ் விரைவில் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (https://nta.ac.in/) அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x