Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

சென்னையில் மாமனார், மாமியார், கணவன் சுட்டுக் கொலை மனைவியின் சகோதரர் உட்பட 3 பேர் மகாராஷ்டிராவில் சிக்கினர் காரை துரத்திச் சென்று பிடித்தது தனிப்படை; மற்ற மூவரும் விரைவில் பிடிபடுவார்கள் என தகவல்

சென்னை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேட்டி அளிக்கும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால். அருகில் கூடுதல் ஆணையர்கள் ஏ.அருண், தேன்மொழி, இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன். படம்: ம.பிரபு

சென்னை

சென்னை யானைக்கவுனியில் மாமனார், மாமியார், கணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், மனைவியின் சகோதரர் உட்பட 3 பேரை மகாராஷ்டிராவில் சென்னை தனிப்படை போலீஸார் காரில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர்.

சென்னை யானைக்கவுனி விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் தலில் சந்த் (74). ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய் (68), மகன் ஷீத்தல் குமார் (40). கடந்த 11-ம் தேதி இவர்கள் 3 பேரும் வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

கொலை தொடர்பாக ஷீத்தல் குமார் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் உட்பட 3 பேரை மகாராஷ்டிராவில் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலில் சந்த் உட்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவர்களை கைது செய்ய வட சென்னை காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், துணை ஆணையர் மகேஷ்வரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில், தலில் சந்த் மருமகள் ஜெயமாலா, இவரது சகோதரர் கைலாஷ் உள்ளிட்ட 6 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இவர்கள் எத்தனை மணிக்கு வந்தனர், சம்பவ இடத்தில் எவ்வளவு நேரம் இருந்தனர் என்ற விவரங்களும் அதில் தெளிவாக பதிவாகி இருந்தன. சம்பவ இடத்தில் 5 துப்பாக்கி தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் அனைவரும் காரில்மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு தப்பிச் செல்லும் தகவலும் கிடைத்தது. ஜெயமாலா உள்ளிட்ட 6 பேரும் ஆந்திரா வழியாக தப்பிச் செல்லலாம் என்பதால், அம்மாநிலபோலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அத்துடன், கர்நாடகா மற்றும் புனே போலீஸாரின் உதவியையும் நாடினோம்.

இதற்கிடையே, நமது தனிப்படையில் உள்ள ஆய்வாளர் ஜவகர் தலைமையிலான போலீஸார் விமானம் மூலம் புனேக்கு விரைந்தனர். அதற்குள், ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ் உள்ளிட்ட 3 பேர் புனேவில் இருந்து சோலாப்பூருக்கு காரில் தப்பிச் செல்வது தெரியவந்தது. புனே போலீஸார் உதவியுடன் அந்த காரை துரத்திச் சென்றனர்.

அந்த வாகனம் அதிவேகமாக செல்ல, தனிப்படையினர் உயிரை பணயம் வைத்து துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த காரின் மீது மோதி, அதைநிறுத்தச் செய்தனர். ஜெயமாலாவின் சகோதரரான புனேவை சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவை சேர்ந்த ரவீந்திரநாத் கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய 3 பேரும் காரில் இருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, தலில் சந்த் உள்ளிட்ட 3 பேரையும் சுட்டுக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட 0.32 ரக ரிவால்வர் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் மற்றும் ஜெயமாலா உட்பட 6 பேரும் சேர்ந்து, தலில் சந்த், ஷீத்தல்குமார், புஷ்பா பாய் ஆகியோரை 5 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒருமுறை சுடும்போது, துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. அந்த துப்பாக்கி, தமிழகத்தில் வாங்கப்பட்டது இல்லை. புனேவில் இருந்து திட்டமிட்டு எடுத்து வந்து, 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளோம். இதில் கைலாஷ் மீது புனே உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு இருப்பது தெரியவருகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை விரைவில் கைது செய்வோம்.

ஷீத்தல்குமார் - அவரது மனைவி ஜெயமாலா இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பாக புனே காவல் நிலையத்தில் ஜெயமாலா புகார் கொடுத்துள்ளார். தற்போதும் குடும்ப பிரச்சினை காரணமாகவே கொலை நடந்துள்ளது. விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது.

தலில் சந்த் வீட்டில் இருந்து ஒரு லாக்கர் திருடப்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அதில் எவ்வளவு பணம், நகைகள் இருந்தன என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் காவல் ஆணையர்கள் அருண் (வட சென்னை), தேன்மொழி (மத்திய குற்றப்பிரிவு), வடசென்னை இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x