Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

எத்தனை தடைகள், சோதனைகள் வந்தாலும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி

சென்னை

எத்தனை தடைகள், சோதனைகள் வந்தாலும் வெற்றிவேல் யாத்திரை தொடந்து நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

பல்வேறு மாவட்டங்களிலும் வேல் யாத்திரை நடந்து வருகிறது. இதில் நானும், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற முக்கியத் தலைவர்களும் பங்கேற்று வருகிறோம். தீபாவளிக்கு பிறகு, 17-ம் தேதி யாத்திரைதொடங்கும். டிச.6-ல் திருச்செந்தூரில் யாத்திரை நிறைவடையும்.

வரும் 22-ம் தேதி கோவையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, 23-ம் தேதி மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், 24-ம்தேதி கர்நாடக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா, டிச.2-ம் தேதி கன்னியாகுமரியில் தேசிய இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தென்காசியில் தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் வேல் யாத்திரையில் பங்கேற்கின்றனர். திருச்செந்தூரில் நிறைவு விழாவில் பங்கேற்க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

வேல் யாத்திரையின்போது, சாலையில் நடந்து செல்பவர்களைக்கூட காவல் துறை கைது செய்கிறது. பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், வீட்டிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது.

மத்தியில் 2 எம்.பி.க்களோடு இருந்த பாஜக, பல்வேறு தடைகள், சோதனைகளை தாண்டி தனித்து ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல, எத்தனை தடைகள், சோதனைகள் வந்தாலும், அவற்றைத் தாண்டி வேல் யாத்திரை நடைபெறும்.

மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி வருபவர்கள், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தவும், கரோனா முன்களப்பணியாளர்களை பெருமைப்படுத்தவும்தான் வேல் யாத்திரை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x