Published : 11 Feb 2024 05:40 AM
Last Updated : 11 Feb 2024 05:40 AM
புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலி விலகி உள்ளார். ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3-வது ஆட்டம் வரும் 15-ம் தேதி ராஜ்கோட்டிலும், 4-வது ஆட்டம் 23-ம்தேதி ராஞ்சியிலும், கடைசி மற்றும்5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.
இந்த போட்டிகளுக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழுவினர் அறிவித்தனர். முதல் இருபோட்டிகளிலும் பங்கேற்காத விராட்கோலி தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் எனவும், அவரது முடிவை முழுமையாக மதிப்பதாகவும், ஆதரிப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த முகமது சிராஜ் அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் அவேஷ் கான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்துவிலகி இருந்த கே.எல்.ராகுல்,ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். எனினும் பிசிசிஐ-யின் மருத்துவக்குழு அளிக்கும் அறிக்கையைபொறுத்தே இவர்கள் விளையாடுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளதால் சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர்ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், சர்பராஸ் கான்,துருவ் ஜுரெல், கர் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT