Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமையுமா?

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைய அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா உப்பூர் - காரங்காடு இடையே ஏ.மணக்குடியில் ரூ. 450 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கவும், அதன் மூலம் 6000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும், 110 விதியின் கீழ் 2015-ல் சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த பூங்காவுக்குத் தேவையான தண்ணீருக்காக 1 கோடி லிட்டர் திறனுள்ள, கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஏ.மணக்குடியில் 225 ஏக்கரை கையகப் படுத்தவும், அதில் 30 ஜவுளி உற்பத்தித் தொழில் நிறுவனங்களை அமைக்க உள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு நிதியுதவி ரூ. 150 கோடி வழங்க உள்ளதாகவும் 2017-ல் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு நிதியுதவி பெறவும், சுற்றுச்சூழல் துறை அனுமதி, கடலோர ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் திட்ட அனுமதி, வரைபட அனுமதி ஆகியவை ஆய்வு அறிக்கை கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

17.09.2019 அன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதோடு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தத் தொழிற்சாலைகளும் இல்லாத நிலைதான் இதுவரை உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலாவது ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைய அரசியல் கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்களா என வணிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x