Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

ராமநாதபுரம் அருகே 692 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் வரியின் பெயரால் குறிப்பிடப்படும் இறைவன்

ராஜகுரு

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, உந்திபூத்த பெருமாள் கோயிலில் புரவுவரியின் பெயரால் புரவுவரி விண்ணகரப் பெருயான் என இறைவனைக் குறிப்பிடும் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

தொண்டி, உந்திபூத்த பெருமாள் கோயில் திருப்பணியின் போது கருடாழ்வார் சன்னதியின் உள்பகுதிச் சுவரில் இருந்த கல்வெட்டு, அதன் வெளிப்பகுதியில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு படித்து ஆய்வு செய்தார். அப்போது, அக்கல்வெட்டு கி.பி.1329-ம் ஆண்டைச் சேர்ந்த 692 ஆண்டுகள் பழமையான பராக்கிரமபாண்டியன் காலக் கல்வெட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வே. ராஜகுரு கூறியதாவது:

மொத்தம் 35 வரிகள் கொண்ட கல்வெட்டின் முதல் வரியும், கடைசி பகுதியும் அழிந்து விட்டன. கல்வெட்டின் ஓரங்களில் சிமெண்ட் பூச்சால் எழுத்துகள் சேதமடைந்துள்ளன. கி.பி.1315 முதல் கி.பி.1334 வரை ஆண்ட திரிபுவனச் சக்கரவர்த்திகள் பராக்கிரமபாண்டியனின் 15-ம் ஆட்சி யாண்டில் இக்கல்வெட்டு வெட்டப் பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1329 ஆகும். இவருக்கு வாளால் வழி திறந்தான் எனும் பட்டப்பெயரும் உண்டு.

இக்கோயில் இறைவனுக்கு திருப்படி மாற்றுக்காக, மலை மண்டலத்தைச் சேர்ந்த திருவரங்கரயன் என்பவர் வழங்கிய பணத்தைக் கொண்டு, அரும்பொற் கூற்றத்தைச் சேர்ந்த சாத்தி ஏரி என்ற ஊரில் நிலம் வாங்கி, அதை இறையிலி தேவதானமாக இக்கோயிலுக்குக் கொடுத்துள்ளனர். திருவாடானை அருகிலுள்ள புல்லுகுடி

சிவன் கோயிலில் உள்ள கி.பி.1201-ம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டிலும் சாத்தி ஏரி என்ற ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாத்தி ஏரி எனும் பெயரில் இப்பகுதியில் ஊர் எதுவும் இல்லை. அது அழிந்து போயிருக்கலாம். கல்வெட்டில் கடம்பாகுடி என்ற ஊரும் சொல்லப்படுவதால், அவ்வூருக்கு அருகில் சாத்தி ஏரி இருந்திருக்கலாம்.

தானமாக வழங்கிய நிலத்தின் எல்லைகளைச் சொல்லும்போது, செட்டி வயக்கல், கண்ணன் வயக்கல், வடகூற்று நிலம், கிழக்கு நிலம் ஆகிய நிலத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலத்தை வயக்கல் என்பர். மேலும் மாகாணி, முக்காணி, அரைக்காணி, அரை மா, முதிரிகை ஆகிய நில அளவுகளும் சொல்லப்பட்டுள்ளன. கல்வெட்டில் சொல்லப்படும் விழுப்பரயன் என்பவர் நிலம் விற்றுக் கொடுத்தவராக இருக்கலாம்.

இக்கோயில் இறைவன் பெயர் தற்போது உந்தி பூத்த பெருமாள் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் கோயில் பெயர் திருமேற்கோயில் எனவும், இறைவன் பெயர் புரவுவரி விண்ணகரப் பெருயான் எனவும் கூறப்பட்டுள்ளது. திருமால் கோயிலை விண்ணகரம் என்பர். புரவுவரி என்பது அரசனால் விதிக்கப்படும் நிலவரி ஆகும். வரியின் பெயரால் இறைவன் பெயர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெருமாள்கோயில் இறைவன், புரவுவரி விண்ணகர எம் பெருமான் எனப்படுகிறார்.

தானம் கொடுத்த திருவரங்கரயன் மலை மண்டலமான கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இதே போன்று முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத் தில் மலைமண்டலத்துக் காந்த ளூரான எறிவீரபட்டினத்து இராமன் திருவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண் பூமிச் சமையச் சக்கரவத்திகள் என்பவர் சுந்தரபாண்டியன் பட்டினம் சிவன் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருக்கிறார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆனந்தூர், தீர்த்தாண்டதானம் ஆகிய ஊர் சிவன் கோயில்களிலும் பராக்கிரமபாண்டியனின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x