Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM

முதல்வருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு : குறுகியகால வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், குறுகியகால வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.நாகை மாலி, முன்னாள் எம்எல்ஏபி.டில்லிபாபு ஆகியோர் சந்தித்து, முதல்வரின் பல்வேறு அறிவிப்புகள், நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதல்வருக்கு நன்றி

மேலும், நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுஉறுப்பினராக வி.பி.நாகை மாலிநியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் இணைந்துசெப்.27-ம் தேதி நடத்த உள்ள முழு அடைப்புப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்ய திமுக ஆதரளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால், போராட்டத்துக்கு வலுசேரக்க ஆதரவளிப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வரிடம் கட்சியினர் அளித்தனர். அதில், பாலபிரஜாபதி அடிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நெய்வேலி காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுப்பிரமணியன் வழக்கில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய காலக் கடன்களாக மாற்றப்பட்ட, குறுகியகால வேளாண் கடன் நிலுவைகளை ரத்து செய்யவேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x