Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் - வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுப்பை துரிதப்படுத்த வலியுறுத்தல் :

கோவில்பட்டி

ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் வறுமைக்கோடு பட்டியலுக்கான கணக்கெடுப்பு பணிகனை துரிதப் படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு தகுதியான பயனாளிகளை நிர்ணயம் செய்யும் வகையில் வறுமைக்கோடு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஊராட்சி தலைவர், எழுத்தர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமூகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கிய குழுவினரால் நடத்தப் பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இக்கணக் கெடுப்புக்கு பின்னர், மீண்டும் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்படவில்லை. இதனால், வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெற தகுதி இருந்தும் ஏராளமான மக்கள் அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங் களை புதிதாக இணைக்கும் வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வறுமைக்கோட்டு பட்டியலை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகு மூலம் ஒன்றிய அளவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் விவரங்கள் ‘டிப்ஸ்’ (tipps) என்ற இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்பு பணி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மந்த நிலையில் உள்ளது. இந்த ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கணக்கெடுப்பில் புதிதாக ஒரு குடும்பம் கூடச் சேர்க்கப்பட வில்லை. பல ஊராட்சிகளில் ஒற்றை இலக்க எண்ணை தாண்டவில்லை. தற்போது சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காண்பித்து, கணக் கெடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் விரைவாக மேற் கொண்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x