Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு - பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (1-ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியைக் தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (1-ம் தேதி), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் நாளை (1-ம் தேதி) முதல் வரும் 30-ம் தேதி முடிய அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். மேலும், வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை), 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 27-ம் தேதி (சனிக்கிழமை), 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, படிவம் 6-ன் மூலமாகவும், பதிவினை நீக்கம் செய்ய படிவம் 7-ன் மூலமாகவும், முன்னரே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8-ன் மூலமாகவும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ன் மூலமாகவும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து வேறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உண்டான பகுதியில் குடி பெயர்ந்து சென்றவர்கள், புதிய பகுதியில் பெயர் சேர்க்கவும், படிவம் 6-ஐ பயன்படுத்த வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது voters helpline app என்ற ஆண்ட்ராய்ட் செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். பொது சேவை மையங்களிலும் இணைய வழியில் பதிவு செய்யலாம். இதைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x