Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM

கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் : மின்சாரத்துறை அமைச்சர் தகவல்

கோவை மாநகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் ‘மக்கள் சபைக் கூட்டம்’ நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ‘மக்கள் சபைக் கூட்டம்’ நிகழ்ச்சி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 59-வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், அமைச்சருடன் இணைந்து, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோரும் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 60-வது வார்டு எஸ்.எம்.எஸ் லேஅவுட், 61-வது வார்டு நந்தா நகர், 63-வது வார்டு கள்ளிமடை, 64-வது வார்டு வரதராஜபுரம், 62-வது வார்டு அய்யர் லேஅவுட் உள்ளிட்ட இடங்களில் நடந்த மக்கள் சபைக் கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோாிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அமைச்சரிடம் மனுக்களை அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பாகவும் அவரிடம் வலியுறுத்தினர். சாலையை சீரமைக்க வேண்டும், தெருவிளக்கு பழுதை சரி செய்ய வேண்டும், உதவித் தொகை வழங்க வேண்டும், சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோாிக்கைகள், புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், அந்த மனுக்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சிங்காநல்லூர் தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணிகள் நிதி ஒதுக்கி முடித்து வைக்கப்படும். கோவையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 70,819 பேர் பயன் பெற்றுள்ளனர். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், கோவையில் வழங்கப்பட்ட 38,277 மனுக்களில் ஏறத்தாழ 13,439 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதை மாற்றி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு நிதிகள் பெற்று மேம்படுத்தக்கூடிய பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x