Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

‘இனி ஒரு இந்து கோயிலைக்கூட அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்’ :

பெரம்பலூர் இனி ஒரு இந்து கோயிலைக் கூட அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர்எச்.ராஜா தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து கோயில்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான பிறகு 5 இடங்களில் இந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை சரியாக பராமரிக்க இயலாத நிலையில், மேலும் பல கோயில்களை கையகப்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இனி ஒரு இந்து கோயிலைக்கூட அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

தங்கத்தை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்க அறங்காவலர் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ அறநிலையத் துறை சட்டப்படி அதிகாரம் இல்லை. அரசின் இந்த முடிவை எதிர்த்து சட்டப் போராட்டம் ஒருபக்கமும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் இன்னொரு பக்கமும் தொடர்ந்து நடைபெறும். தாய் மதம் திரும்ப வேண்டும் எனும் சீமானின் கருத்து சரியானது. அதை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x