Published : 26 Sep 2021 03:27 AM
Last Updated : 26 Sep 2021 03:27 AM

குடியாத்தம் அருகே வீட்டில் ரகசியமாக - கள்ள நோட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட கும்பல் கைது : ‘ரைஸ் புல்லிங்’ மோசடியில் ஈடுபட்டதும் அம்பலம்

குடியாத்தத்தில் கள்ள நோட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக மின்வாரிய அதிகாரி உள்ளிட்ட 6 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜீவா நகர் பகுதியில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஒருங்கிணைந்த குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, நகர காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் மற்றும் நுண்ணறிவு பிரிவு குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கருப்பு நிற காகித பண்டல்கள், ரசாயன கலவைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், ரைஸ் புல்லிங் எனப்படும் மோசடியில் ஈடுபடுவதற்கு பயன் படுத்தப்படும் கோபுர கலசத்தின் அடிப்பகுதியையும் மீட்டனர்.

இது தொடர்பாக அரக்கோணம் மின் வாரியத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வருபவரும் அந்த வீட்டின் உரிமையாளருமான சரவணன் (47), கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வேலு (42), கொல்லமங்கலத்தைச் சேர்ந்த அசோக்குமார் (30), தாமு (20), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம், திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில், வேலு என்பவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதுடன் வேலம்பட்டு கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதும் தெரியவந்தது. தாமு என்பவர் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர். இவர்கள், மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் கள்ள நோட்டுகளாக மாறும் கருப்பு நிற தாளை வாங்கியுள்ளனர். இந்த தாள்களை வைத்து ரூ.1 கோடி அளவுக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரிக்கும் பணியிட ஈடுபட முயன்றது தெரியவந்தது. அதற்குள் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டதால் மோசடி கும்பலின் ஆணி வேர் எது என்றும் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், ‘ரைஸ் புல்லிங்’ மோசடியிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x