Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

தேர்தலின் போது வாக்குச் சாவடி மையங்களில் - கரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக 3,634 பேர் நியமனம் : தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தருமபுரி மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடிக்கு 2 பேர் வீதம் 3,634 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர்கள் தினேஷ் சிங், கமால் ஜஹான் லக்ரா, பங்கஜ், காவல் பணி பார்வையாளர் சக்கிராலா சாம்பசிவராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 870 மையங்களில் 1,817 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலைமை அலுவலர் வாக்குச் சாவடி அலுவலர் நிலை-1, 2, 3 ஆகிய நிலைகளில் 4 பேர் வீதம் 7,268 பணியாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணி மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 20 சதவீதம் கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 149 நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர, 20 சதவீதம் நுண்பார்வையாளர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 2 பேர் வீதம் 3,634 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், 10 சதவீதம் கூடுதல் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், 146 மருத்துவ அலுவலர்கள், 146 சுகாதார ஆய்வாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட மருத்துவ அலுவலர்களும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு நாளின் தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 25-ம், இதர வாகனங்கள் 23-ம் என 48 வாகனங்கள் மருத்துவ பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கோட்டாட்சியர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம் (பென்னாகரம்) முத்தையன் (அரூர்), சாந்தி (பாலக்கோடு), நாசீர் (பாப்பிரெட்டிப்பட்டி), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் (தேர்தல்), நாராயணன் (பொது) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x